நெருப்பு அழுக்காகாது - டாலஸ் SOTT நிகழ்வு
இரண்டு மாதங்களுக்கு முன், ஆகஸ்ட் 2025 கம்பராமாயணக் கச்சேரி முடிந்தவுடன் கலைஞர்களுடன் டாலஸ் வாசிப்பு வட்ட நண்பர்களும் ஆஸ்டின் நண்பர்களும் சேர்ந்து இரவுணவுக்காக சென்றோம். கச்சேரி குறித்த எங்கள் மகிழ்ச்சியையும் அதற்கான செயல் கொடுத்த நிறைவையும் கொண்டாடிவிட்டு பிரியும் போது சௌந்தர் சார் மெதுவாக, “அடுத்து ஜெ. வருகிறார் - SOTT புத்தக அறிமுக விழா - டாலஸில் தான் - கெட் ரெடி” என்றார்.
நிகழ்ச்சி நிரல் குறித்தும் இடம் குறித்தும் வெவ்வேறு கருத்துகள் கொண்டிருந்த டாலஸ் நண்பர்களிடம் பாலாஜி “ஆஸ்டின் வரும் ஜெ. வை நாம் சென்று அழைத்துவரலாம். என்ன நினைக்கிறீர்கள்? ” என்று கேட்டவுடன் எல்லோரும் ஒத்துக்கொண்டு கைதூக்கி விட்டதோடு மட்டுமல்லாமல், அப்போதே சௌந்தர் சாரை அழைத்து துண்டு போட்டு வைத்துவிட்டோம். முன் பின், இடம் வலமென மாறிய எல்லாவற்றிலும் மாறாமல் இருந்தது இது மட்டும் தான். ஒருவேளை நாங்கள் இதை முடிவெடுத்தது “துடுவ்” என்று அவராலும் உங்களாலும் அழைக்கப்படும் துருவ் முன்னிலையில் என்பதால் தானோ என்று ஒரு எண்ணம்.
நண்பர்கள் அனைவருக்கும் தொடர்ந்து செயலால் நிரம்பிய நாட்கள். Barnes & Noble புத்தக்கடையின் பணியாளர் எமிலியிடம் நம் நிகழ்வு குறித்து “குறைந்தபட்சம் 50 முதல் 70 பேர் வரை வருவார்கள், அவர்கள் அமர நாற்காலிகள் வேண்டும்” என்று கேட்ட போது கொஞ்சம் நம்ப முடியாமல்தான் “Let me see what I can do for you” என்றுதான் கூறினார். இரண்டு நாட்கள் கழித்து அழைத்து “Fifty or Fifteen” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, “சரி, 30 பேருக்கு இருக்கை ஏற்பாடு செய்துவிடுகிறோம், 50 புத்தகங்கள் விற்பனைக்கு இருக்கும்” என்று கூறினார். சௌந்தர் சாரிடம் "சார், புக் 50 காபி தான் ஸ்டாக் பண்ணியிருக்காங்க, ஓகேவா?" என்ற போது "30 வித்துட்டா ஜெயிச்சிட்டோம்பா" என்றார். இதெல்லாமே தொலைபேசியில் தான் நடந்தது.
நிகழ்வுக்கு ஒரு வாரம் முன்னர், நேரில் சென்று பார்த்துவருவோம் என்று கடைக்கு சென்றபோது ஒரு எழுத்தாளர் கையெழுத்து நிகழ்வு இருந்தது. வாசலருகே ஒரு மேசை போட்டு அதில் சில புத்தகங்களை அடுக்கி அதன் ஆசிரியர் தனியே அமர்ந்திருந்தார். வாசிப்புக்கு மரியாதை உள்ள அமெரிக்காவில் இப்படியா என்று கொஞ்சம் திக்கென்றுதான் இருந்தது. எமிலியிடம் கேட்டபோது "இது தான் வழக்கம். உன் எண்ணிக்கை குறித்து நான் கேட்ட கேள்வி இப்போது உனக்கு புரியுமென்று நினைக்கிறேன். நீ அதை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறாயா?" என்றார். டாலஸ் மற்றும் ஆஸ்டின் நண்பர்களின் குடும்பங்களை மனதிற்குள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே மற்றொரு குரல் "டேய், வரப்போவது ஜெயமோகன் டா" என்றது. "இல்லவே இல்லை எமிலி. வாசலினருகே ஒற்றை மேசை என்பதை மறந்துவிடுங்கள். சற்றே பெரிய இடம் கண்டிப்பாக வேண்டும். மீதமுள்ள 20 பேரை அமர வைக்க உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டு அதே “Let me see what I can do for you” வை பெற்றுக்கொண்டேன்.
உங்களையும் அருண்மொழி அக்காவையும் அழைத்து வர பாலாஜி, அன்னபூர்ணா, நான் மூவரும் ஆஸ்டின் கவிதா பாலா இல்லத்திற்கு வருவதாக திட்டம். ஆனால், ஆஸ்டின் நண்பர் கிரியின் கீதை நூல் குறித்து உங்கள் தளத்தில் வந்த அவர் கடிதம் அதேயுணர்வில் குறளினிது உரையை மாற்றிக்கொண்டிருந்த எனக்களித்த உணர்வெழுச்சியும், உங்கள் சந்திப்பு புகைப்படங்களில் அவரில்லத்தில் இருந்த இளையராஜாவின் போஸ்டரும் “சரிதான், இங்கு யாரும் தனியில்லை. குறிப்பாக, கிறுக்கர்கள்” என்றெண்ணிக்கொண்டு வண்டியை அங்கே விட்டோம். நீங்கள் கவிதா இல்லத்திற்கு வந்துவிட்டதை சௌந்தர் சார் போனில் சொன்னதும் உடனே புறப்பட்டு வந்து அவர் வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டும் வரை இருந்த ஆர்வமும், வேகமும், உங்களைக் காணப்போகும் குதூகலமும் எல்லாம் என்னவோ ஆகி உள்ளங்கை வியர்க்கும் அளவிற்கு பதட்டம் அதிகரித்தது. முதல்முறையாக உங்களை சந்திக்கவிருந்த அன்னபூர்ணாவுக்கு வாய்ப்பளிப்பதான பாவனையில் அவரை முன்னால் அனுப்பிவிட்டு ஒரு வேலையும் இல்லாமல் திரும்பவும் காருக்குப் போய் வெறுமே திறந்து மூடிவிட்டு சற்று நேரம் கழித்தே நுழைய முடிந்தது. ஆசிரியரை காணும், அவரை எண்ணிக்கொண்டிருக்கும் ஆவலை / தவிப்பைக் குறித்து நீங்கள் கூறிய வரிகள் முழுமையாக புரிந்த இன்னொரு தருணம்.
காரில் செல்லும்போது ஏதேனும் மஞ்சள் வாகனத்தைக் கண்டால் வாய்விட்டுச் சொல்லி அருகிலிருப்பவரை அடிக்கும் ஒரு விளையாட்டு எங்கள் குடும்பத்தில் உண்டு. மகளிடமிருந்து விளையாட்டாக தொடங்கிய இப்பழக்கம் தனியாக செல்லும் போதும் வெறும் சீட்டை அடிக்குமளவிற்கு அனிச்சையாக மாறிப்போனது. “ஒட்டுகிறீர்களா?” என்று பாலாஜி கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் சரியென்று சொல்லிவிட்டேன். வழக்கமான என் காரை விட பெரிய & புதிய கார், எனவே கவனம் ஓட்டுவதில் தான் இருந்தது. முதல் மஞ்சள் வாகனத்தைக் கண்டவுடன் எழுந்த கை அருகிலமர்ந்திருந்த உங்களை உணர்ந்தவுடன் தாழ்ந்து போயிற்று. அப்போதுதான் நான் ஜெ. வுக்கு காரோட்டிக்கொண்டிருக்கிறேன் என்று மனம் உணர்ந்தது. அதன் பின்னர் கடந்து போன மஞ்சள் வாகனங்கள் எல்லாம் “அருகிருப்பது ஜெ. நீ அவருக்கு காரோட்டிக் கொண்டிருக்கிறாய்” என்ற சொல்லையே மீண்டும் மீண்டும் நினைவுறுத்த என் நல்வாய்ப்பை நினைத்து அகமகிழ்வோடே இருந்தேன். அடுத்த ஆறு மணிநேரங்கள் முழுக்க உங்கள் அருகாமையிலும், கற்றலிலும், கண்ணீர் வந்து மறைக்குமளவிற்கு சிரிப்பிலும் கழிந்தது. எங்கள் கேள்விகளுக்கு உங்களின் விரிவான பதில்கள், வழிகாட்டுதல்கள் என என்றென்றும் நினைவில் இருக்கப்போகும் தருணங்கள்.
மறுநாள் நண்பர் பாலாஜி இல்லத்தில் மேலும் சில டாலஸ் வாசக வட்ட நண்பர்களோடு சந்தித்த போது உணவுக்கு முன் நேரம் சிரித்துக் கழிந்தது. எதுவும் உதவி செய்யவா எனக் கேட்ட எல்லா நண்பர்களிடமும் “எதுவும் வேண்டாம்ங்க, நீங்க வந்தால் மட்டும் போதும்ங்க” என்று கூறிய ராதா பாலாஜி அத்தனை உணவு வகைகளை தயார் செய்து வைத்திருந்தார். அவரில்லத்தின் பின்கட்டு ஒரு அபாரமான இடம். அங்கே, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தீவிரமான விஷயங்களை வழக்கம் போல் கோர்வையாக நீங்கள் விளக்கிக்கொண்டிருந்தீர்கள். மாலை நிகழ்வு நடக்கும் புத்தகக் கடைக்கு சற்று முன்னரே செல்ல வேண்டியிருந்ததால் பாதியிலேயே கிளம்ப வேண்டியிருந்தது.
Barnes & Noble கடையின் சற்று விசாலமான இடத்தில் ஒரு மேசையும் 20 நாற்காலிகள் மட்டும் போட்டிருந்தார்கள். எமிலி விடுமுறையில் இருந்ததால் கிறிஸ்டெல் எனும் புதியவர் - மீண்டும் வலியுறுத்தியவுடன் கூடுதலாக இரண்டு பெஞ்ச்சுகள் போடப்பட்டன. எங்களிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்பவர்களிடம் செய்ய வேறெதுவும் இல்லை. நிகழ்வு தொடங்க ஐந்து நிமிடங்கள் வரை பதினைந்து பேர் மட்டுமே இருந்ததற்கும் “வேறெதுவும் வேண்டுமென்றால் கேள்” என்று கிறிஸ்டெல் சொன்னதிற்கும் ஏதும் தொடர்பிருக்குமோ என்றெல்லாம் யோசிக்கத்தொடங்கினேன். அப்போது காதில் இயர்போன் போட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த அருண்மொழி அக்காவைப் பார்த்ததும் உங்கள் பாஸ்போர்ட் மீட்பு அனுபவக்கட்டுரையின் (“நகுக”) கடைசி வரி நினைவிலெழுந்தது - “செய்யவேண்டியதை எல்லாம் செய்துவிட்டோம். ஆகவே நிம்மதி. இனி அந்த பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி. நல்லவிஷயம்தானே...” ஆம், புன்னகைக்க வேண்டியது தான்.
ராஜனின் இசையில் “உலகம் யாவையும்” பாடலைப் பாடி நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரியா. அன்னபூர்ணாவின் உங்களைப்பற்றிய அருமையான அறிமுகத்தில் தொடங்கி சித்தார்த்தின் உரை. ஒரு கையால் எண்ணிவிடக்கூடிய அளவிற்கே இந்தியாவிற்கு வந்திருப்பதாக சொன்ன அவருக்கு SOTT கதைகள் காட்டிய இந்தியா கிட்டத்தட்ட அங்கேயே பிறந்து வளர்ந்த எங்களுக்கு தெரிந்த இந்தியாவிற்கு மிக அருகே இருந்தது கதைகளுக்கும் ப்ரியம்வதாவின் மொழிபெயர்ப்புக்கும் சான்று.
தொடர்ந்து மீனாக்ஷியின் உரை. முன்னரே தன் வாசிப்பு குறித்து தமிழில் எழுதி வைத்திருந்த அவளின் குறிப்பை பேச இருந்தவளிடம் நிகழ்வுக்கு காரில் வரும்போது ஆங்கிலமும் கலந்து பேச முடியுமா என்றபோது முறைத்தாள். ஆனால், தமிழ்க்குறிப்பைப் பார்த்து ஆங்கிலத்தில் பேசிவிட்டது குறித்து அவளுக்கே ஆச்சரியம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவளுக்கு சொன்ன வணங்கான் கதையை நினைவிலிருந்து எடுத்து அதை ஆங்கிலத்தில் வாசித்து தானே எழுதிய உரையை ஜனனி கொடுத்து, “Do I have a chance?” என்றாள். “உன் கடைசி பாரா ரொம்ப சின்னக் குழந்தை தனமாக இருக்கிறது” என்றதற்கு “Yes, I don’t want to share all my philosophical thinking” என்றாள். நண்பர்கள் அவள் உரையைப் பற்றிக் கூறும் போது அந்த குழந்தைத்தனமான முடிவு இயல்பாக இருந்ததாக கூறினார்கள்.
மூன்று நகர்களிலிருந்து கடைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமாதமான பல நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டேயிருக்க நிகழ்வின் நடுவே பார்த்தபோது இறுதி ஐந்துவரிசை நாற்காலிகளுக்குப்பின் ஐந்து வரிசைகளிலும் பக்கவாட்டிலும் நண்பர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
சஹாவின் கேள்விகளும் அதற்கு உங்களின் பதில்களும் சுவாரசியமாக இருந்தன. தொடர்ந்து பார்வையாளர்களின் கேள்விகளுக்கு உங்கள் கூரிய பதில்கள் வந்திருந்த சில முதல் முறை கேட்பவர்களுக்கு சிறிய அதிர்ச்சியையும் பெரிய ஆச்சர்யத்தையும் அளித்தது. குறிப்பாக, பலரும் “நெருப்பு அழுக்காகாது” என்ற உங்கள் வரி குறித்து சொன்னார்கள். பலரும் டாலஸ் வாசிப்பு குழு குறித்தும் அதில் இணைவது குறித்தும் கோரிக்கைகள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
நான் அங்கேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்ததற்கு இன்னொரு காரணம் புத்தக விற்பனையை கவனிக்கவும்தான். விழாவில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் மூன்றே மூன்றைத்தவிர எல்லாமும் 12 நிமிடங்களில் காலியானது. அந்த மூன்றும் 26வது நிமிடத்தில் வாங்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று கொண்டே எல்லோரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி கையெழுத்திட்டு, எல்லாக் குழந்தைகளையும் கொஞ்சிக்கொண்டிருந்த உங்களைக் காணவே அவ்வளவு நிறைவாக இருந்தது.
விழா முடிந்து நன்றி கூறச் சென்று கிறிஸ்டெலிடம் பேசும் போது பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்தும், நிகழ்விலேயே எல்லா பிரதிகளும் விற்றுப்போனது குறித்தும் தனது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தெரிவித்தார். பல விதங்களில் இது ஒரு தொடக்கம், முன்நிகழ்வில்லாதது என்றவர் இந்த நிகழ்வைக் காட்டி மைக், கூடுதல் நாற்காலிகள் போன்றவற்றை கோரிப்பெறப்போவதாகவும் கூறினார். உங்களின் மற்ற புத்தகங்களைப் பற்றியும் பட்டியல் வாங்கிக்கொண்டார். கிளம்பி வாசலுக்கு வந்தவன்பின் ஓடிவந்து உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நம் விருப்பங்களுக்கும் ஊகங்களுக்கும் திட்டங்களுக்கும் மீறித்தான் சில விஷயங்கள் நடக்கும் என்று எண்ணம் வலுப்பெற்றது - என்ன ஆனாலும், நெருப்பு அழுக்காகாது. ஆம், அவ்வாறே ஆகுக.
எல்லாம் முடிந்து சௌந்தர் சார் காரில் நீங்கள் ஏறிக்கொண்டபின் சௌந்தர் “நல்லது மூர்த்தி, அடுத்தது New York Lit Fest” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். இன்ஷா அல்லா …
===============



.png)




Comments
Post a Comment