வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
2016ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வாழ்வின் சிறிய விஷயங்களில்கூட மகிழ்வடையும் மனதும் அதை பிறர்க்கு சுவைபட கடத்தும் கலையும் வண்ணதாசனுக்கே வாய்த்த ஒரு அதிசயம்.
எப்போதும் அவர் நினைவு வரும்போதும் மனதில் தோன்றும் வரி "கனியான பின்பும் நுனியில் பூ". தினமும் காணக்கிடைக்கும், அண்டை வீட்டு வாசலில் பழுக்கும் அதே மாதுளை தான். ஆனால் அதையே இவ்வளவு சுவையாக கூற அவரால்தான் ஆகிறது. கடையில் வாங்கும் போதும் நல்ல பழங்களை அவருக்கு தேர்ந்து கொடுத்தவர் தன் பெரிய விழிகளுடைய மகளுடன் நிற்கிறாரா என்று அவ்வவ்போது தேடுவேன். விகடனில் வெளியான இந்த ஒரு சிறுகதையே அவருடனான என் அணுக்கதிற்கு போதுமானதாக இருக்கிறது.
2014 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அக்கதை பிரசுரமான தொகுப்பில் அது இடம்பெற்றிருந்த பக்கத்தில் கையெழுத்து கேட்டேன். காரணம் கேட்டால் என் மகளைப் பற்றி சொல்ல எண்ணியிருந்தேன். கண்களும் சேர்ந்து சிரிக்கும் ஒரு புன்னகையுடன் "உங்களுக்கும் மகள் இருக்காளா தம்பி?" என்றார். வேறென்ன சொல்வது, "ஆமா சார், அவளும் வளர்ந்தபின் தினகரி மாதிரி என் கையைப் பிடிச்சுக்கற மாதிரி வாழ்ந்துட்டேன்னா போதும் சார்" என்றேன். எழுந்து என்னை அவர் அணைத்துக் கொண்ட இதம் இன்றும் நினைவில் உறைந்து போயிருக்கிறது. அவர் தகுதிக்கும் என் வயதிற்கும் அவர் அவ்வாறு செய்ய வேண்டுமா என்ன? ஆம், அதுதான் அவர்.
என் பிரிய எழுத்தாளருக்கு வணக்கங்களும் முத்தங்களும். ஜெயமோகனுக்கு நன்றி.
எனதிந்த குறிப்பை ஜெயமோகனுக்கு அனுப்பியிருந்தேன். அது அவர் தளத்தில் வெளிவந்திருக்கிறது.
ஜெயமோகன் தளத்தில் வாசிக்க :

Comments
Post a Comment