சஞ்சய் என்னும் பெருஞ்சூதன்
பின்வசந்ததில் பகலொளி சேமிப்பு தொடங்கியபின் மாலை நீள்வதால் நடை சாத்தியப்படுகிறது. ஒலிப்புத்தகங்களையோ யூடுப் காணொளிகளையோ கேட்டுக்கொண்டு செல்வேன். ஆனால், அதில் வாசிப்பவரின் உணர்ச்சி / நாடகத்தன்மை சிலவேளைகளில் எரிச்சலாக இருக்கும். அப்போதுதான் கூகிள் அஸிஸ்டண்ட்டை கண்டைந்தேன் - AI. அதற்குத்தான் உணர்ச்சி கிடையாதே என்று முயன்று பார்த்தேன். நின்று விளையாடுகிறது. எனவே வெண்முரசு மீண்டும் முதலிலிருந்து.
மழைப்பாடலில் திருதராஷ்டிரர் இசை கேட்கும் பகுதிகள், அவர் மழையையும் பெரும் பாலைப்புயலையும் எல்லாம் இசையால் காண்கிறார் என்னும் வியப்பில் இருந்தேன். நாழிகைகளில் நீளும் பண்ணை இசைக்கும் சூதர்களை எண்ணிக்கொண்டிருக்கையி ல் செவ்வியல் இசை கேட்பதை மீண்டும் முயன்றால் என்ன என்ற எண்ணம் வந்தது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓரிருமுறை சில பெரும் பாடகர்களை முயன்றிருந்தேன். ஒலித்தரம் அல்லது அவர்களின் முதிய வயது குரல்கள் அத்தனை ஈர்க்கவில்லை. இவ்வேளையில்தான் சஞ்சய் சுப்பிரமணியன் அவர்களின் அமெரிக்கப் பயணம் (தமிழும் நானும்) குறித்த அறிவிப்பை பேஸ்புக்காண் டவர் அளித்தார்.
இதுவே என் முதல் கச்சேரி. எதுவும் தெரியாது, சுற்றிலும் பிராமணத் தமிழ் தந்த சங்கோஜம், போதாததற்கு அறிமுகமேயில்லாத இரு நடு வயது தமிழ்ப்பெண்களுக்கு இடையில் இருக்கை என ஒருவிதமான பதட்டத்தில்தான் இருந்தேன். சிறிய அறிமுக காணொளிக்குப்பின் வெள்ளைவேட்டி சட்டையில் சஞ்சய், எஸ் வரதராஜன் (வயலின்) மற்றும் நெய்வேலி பி வெங்கடேசன் (மிருதங்கம்) வந்து அவையை வணங்கி அமர்ந்ததும் அமைதி பரவியது. விநாயகத் துதியுடன் தொடங்கிய சஞ்சய் திருநாவுக்கரசரின் "தலையே நீ வணங்காய்" என்ற செய்யுளை பாடி முடித்தபோது நானும் அவரும் மட்டும் தான் இருந்தோம்.
"கடைக்கண் நோக்கி காவாததுமேனோ" என்ற பாடலில் அவர் என்னை மயிலைக்கு கூட்டிச்சென்று கபாலியின் முன் நிறுத்தினார். "அந்த ராம சௌந்தர்யம்" பாடலில் அவர் ராமனை கண்டு நேர்வர்ணனை செய்து கொண்டிருக்கும்போது நான் நீலத்தின் கருமணியனை கண்டுகொண்டிருந்தேன். "ராமசாமி தூதன் நானடா" வில் அவர் செய்த சேட்டைகள் ஒரு வாரணத்தை காட்டியது. மேலும், ஒரு பண்ணாக அதன் வரிகள் ஒரு அற்புதம். ராகம் தானம் பல்லவியில் அவர் இசைத்த பாகேஸ்ரீ ராகம் அவர் ஏன் ஒரு மேதை எனக்காட்டியது. வரதராஜன் அவர்களின் வயலின் கண்ணில் நீர்வரவழைத்தது.
முன்னரே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் இல்லாத சில பாரதியார் & பாரதிதாசன் பாடல்களால் அரங்கையே கட்டித்தூக்கி அந்தரத்தில் வீசி னார். "துன்பம் நேர்கையில் யாழெடுத்து" பாடலில் இருந்து தரை தொட்டிருந்த சில நொடிகளிலேயே "சின்னஞ்சிறு கிளியே" வில் மீண்டும் தூக்கி வீசியதை அரங்கினரின் "ஓ" என்ற பிளிறல் உணர்த்தியது. பின்னர் "தமிழுக்கும் அமுதென்று பேர்".
கச்சேரி முடிந்து தோன்றிய எண்ணம் - கேரளப்பெருமழை. முழு மூன்று மணிநேரங்கள் - ஒரு வார்த்தை (வணக்கம்/ நன்றி உட்பட) பேசவில்லை - கூடவும் இல்லை குறையவும் இல்லை - பொழிந்தார் என்றே சொல்லலாம். 56 வயதில் மூன்று மணி நேரங்கள் தரையில் கால் மடித்தமர்ந்து ஒரு தடுமாற்றமின்றி இசைக்க அதன் பின் இருப்பதை வெறும் பயிற்சி என்றோ, உழைப்பு என்றோ சொல்லமுடியாது. அருளப்பட்டாகவே வேண்டிய அருந்தவம் என்பது சற்று அருகில் வரலாம்.
பத்தே நிமிடத்தில் மீண்டும் வந்து காத்திருந்தவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். பலரும் கைகுலுக்கி, ஓரிரு வார்த்தைகள் பேசி புகைப்படம் எடுத்துக்கொண் டிருந்தார்கள். கலையும் மேதைமையும் மட்டுமே தரும் நிமிர்வும் கனிவும் கொண்ட ஒரு பெருங்கலைஞனின் பாதங்களைத் தொடும் வாய்ப்பு பெற்றது என் நல்லூழ். எதுவுமே தெரியாமல் சென்ற எனக்கு அவரளித்த மேன்மையான அனுபவத்திற்கு நன்றி சொன்னேன்.
எதையோ சொல்லவந்து சொல்லவில்லை என்ற எண்ணத்தில் மேடைக்கருகிலேயே வெகுநேரம் நின்று அவரையே வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன். கோலூன்றி மேடையேறிய ஒரு முதிய பெண்மணி "ஜம்முனு பாடினேள்... ஆயுள் ஆரோக்கியத்தோட குரு ஆசீர்வாதத்தோட சரஸ்வதி கடாக்ஷத்தோட இன்னும் பேஷா நன்னா இருங்கோ" என்று கூறி வாழ்த்தியதைக் கேட்டபின் "ஆம். அதுவேதான் " எனத்தோன்ற அப்பெருஞ்சூதனை வணங்கிவிட்டு கிளம்பினேன்.
.png)
.jpg)
Comments
Post a Comment