ஈராறு கால்கொண்டெழும் புரவி - வாசிப்பனுபவம்

டாலஸ் நண்பர்களின் அக்டோபர் இரண்டாம் வார சந்திப்பில் ஜெயமோகனின் "ஈராறு கால்கொண்டெழும் புரவி" குறுநாவல் குறித்து விவாதித்தோம். அதற்கான என் வாசிப்பை தொகுத்து எழுதிக்கொண்டதை இங்கே பகிர்கிறேன்.

இந்த நாவலை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மனநிலைகளில் படித்திருக்கிறேன். அதில் நிறைந்திருக்கும் சித்தர் பாடல்கள் குறித்த அறிமுகமில்லாமையாலும் நாவல் நிகழும் தளம் மற்றும் கதாபாத்திரங்களின் மனவோட்டம் குறித்த சரியான புரிதல் இல்லாமையாலும் நாவல் சற்று அந்நியப்பட்டே நின்றது. ஆனால், வேறு சில எழுத்தாளர்களின் இதுபோன்ற படைப்புகள் கூட்டுவாசிப்பின் மூலம் திறந்து கொள்வதைக் கண்டும், தொடர்ச்சியாக சில வாரங்கள் வாசித்த நவீனத்துவ / யதார்த்த காலகட்ட சிறுகதைகள் நம்மில் சிலரிடம் தோற்றுவித்த ஒரு "போதாமை" உணர்வைக் களையவுமே இந்த குறுநாவலை பரிந்துரைத்தேன்.  


இம்முறை வாசித்தது சொல்புதிது வெளியிட்ட புத்தக வடிவில். அதன் முன்னுரையில், சித்தர்ஞானம் மற்றும் பாடல்கள் பகடிகளாக திருப்பப்பட்டுள்ளதையும், அது எல்லோருக்குமானதல்ல எனினும் அனைவருக்கும்  ரசிப்பதற்கான ஒரு வெளி இருக்கிறது என்றும் முன்னுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வெளியை உத்தேசித்தே எனது இந்த வாசிப்பு அமைந்திருக்கிறது. 


மேலும், இந்தமுறை டாலஸ் நகர SOTT வெளியீடு தொடர்பான சந்திப்பில் "ஒரு கதை எழுத கதாபாத்திரங்களா, கருவா எது உங்களுக்கு முதலில் தோன்றும்?" என்ற சஹாவின் கேள்விக்கு "பொதுவாக, முதல் வரி. அதிலேயே அக்கதையின் திட்டமும், மொழியும், வடிவும் அமைந்துவிடும்" என்று பதில் சொன்னார் ஜெ. 


அந்நிகழ்வில் அவரிடம் கையெழுத்து பெற “எழுதுக” என்ற அவர் நூலை என் மனைவி எடுத்து வந்திருந்தார். அதை மறுநாள் புத்தக அடுக்கில் வைக்கும்முன் வெறுமே புரட்டிப் பார்த்த போது “கல்வியழித்தல் ” என்ற கடிதம் கண்ணில் பட்டது. அக்கடிதத்தில் ஜெ கூறுவது :   


“அறிந்த ஒன்றைக் கொண்டு புதியவற்றை அறிதல் எனும் முறை நடைமுறையில் உள்ளது. மூன்று அறிதல் முறைகள் பிரத்யட்சம், அனுமானம், சுருதி மற்றும் கூடுதலாக உவமை. ஆனால், மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் இவ்வியல்பே பெரும் தடையாக அமையும் என்று சொல்லப்படுகிறது. பழைய அறிதல் நீட்சியாகவே எல்லாவற்றையும் ஆக்கிவிடும். ஆகவே, கல்வியும் கல்வியழித்தலும் இணைந்தே மேலே செல்ல முடியும். ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் உவமை முள்ளை முள்ளால் எடுத்து இரண்டையும் வீசிவிட்டு நடத்தல்.


நாம் ஒன்றை அறியும்போது அக்கணத்தில் நாம் அறிவது அறியாமையையே. அந்த வெற்றிடத்தை நாம் உணரும்போது மட்டுமே புதிய அறிதல் சாத்தியமாகிறது. அந்த கல்வியழிதலுக்கு நாம் தயாராகவில்லை என்றால்தான் நம் அறிதல் தரைதட்டி நிற்கிறது. அதுவே மூடத்தனத்தின் உச்ச நிலை என்பது. பெரும்கல்வியாளர்கள் பெருமூடர்களாக ஆகும் தருணம் அதுதான்.”


இந்த மூன்று விஷயங்களையும் தொடர்புபடுத்தியே இந்நூலை நான் விளங்கிக்கொள்கிறேன். ஏனெனில், அப்படி ஒரு ஆள் தான் எம். சாஸ்தான்குட்டி பிள்ளை எம் ஏ, பி எட் .


எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்கு வெளியே ஒரு புறம்போக்கு நிலத்தை வாங்கி குடியேறும் அந்த முன்னாள் தமிழாசிரியர் அப்போது நீரோட்டம் அறியும் நிபுணர். எனினும், திருக்குறள் மேற்கோளுடன் தான் அப்போதும் பேசுகிறார். “கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்…“ அவருடன் பொதி சுமந்து வரும் கூலி வேலை செய்யும் ஞானமுத்தனுக்கு நீரோட்டம் குறித்து அவரளிக்கும் சொல் மூலம் திரைகள் விலக,  அவன் அறிதலே அவனாக அறிதலை அறிய அவனில்லாத ஒருமையில் “எல்லாமே ஒன்றுதான்” என்னும் பெரும் திறப்பை அடைகிறான்.


கதை காலத்தில் பின்னால் சென்று, சாஸ்தான் குட்டி பிள்ளையின் முன்னாள் வாழ்க்கையை காட்டுகிறது. புலவருக்குப் படிக்கும் போது சச்சிதானந்தம் பிள்ளையிடம் சைவ சித்தாந்தமும் சித்த மருத்துவமும் கற்கிறார். தீவிரமாக அதில் ஈடுபடும் அவர், தந்தையின் சொல் தட்டமுடியாமல் நாகம்மையை மணக்கிறார். கனமான பஞ்சபாஷாண தாலத்தை  தூக்கியதன் வியப்பில் தொடங்கிய அவர் ரசக்கட்டு கல்வி, துறவுத் திட்டம் எல்லாம் நாகம்மையால் “விளக்கை அணையுங்கோ”  என்று எளிதாக முடித்து வைக்கப்படுகிறது. அதன்பின் அவரின் தீவிரம் அவளில் மாறுகிறது. ஆனால், இதிலும் ஏற்கனவே கற்ற கல்வி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. மனைவிக்கும் அவருக்குமிடையே தமிழும் சித்தர்களும் அருணகிரியும் வந்துகொண்டேயிருக்கிறார்கள். மனைவியும் அதை விடுமாறு சொல்லிக்கொண்டேயிருக்கிறாள். ஆனாலும், அவர் அதை விட்டு விலகவேயில்லை.  இரண்டு வருடங்களுக்குப்பின் பிள்ளைப்பேற்றில் மனைவியும் குழந்தையும் இறந்தபிறகு கூட;  அதை சாராயமும் கஞ்சாவும் கூட ஒன்றும் செய்யமுடிவதில்லை. அவரின் சித்தாந்தமும் தமிழ் பாடல்களும் இருக்கும் சித்தம் தனியாகவே நிற்கிறது. சொற்கள் அலையடிக்கும் உள்ளதில் அவள் நினைவு வருவதில்லை. ஆனால், வந்ததும் எல்லாமே நின்றுவிடுகிறது. 


அவர் பணிபுரியும் பள்ளியில் கிணறுவெட்ட நீர்நோட்டம் பார்க்க வரும் சாமித்தோப்பு அய்யாவு நாடாரிடம் அவர் சொல்வதற்கு சாஸ்திரம் என்ன? கணக்கு என்ன? என்ற கேள்வி கேட்டு பிணங்கி வெகு அருகே ஆனால் வேறு இடத்தில் தோண்டச்  சொல்கிறார்.  எதுவும் அவர் மண்டையில் ஏறுவதில்லை - தோண்ட வரும் ஒட்டன் சொல்லும் கணக்கு (கல்லு குளுந்து காணுகில்ல) வெடிவைக்க வருபவன் சொல்லும் சாஸ்திரம்  (கந்தக நெடியில்லா, குளுமையில்லயே) உட்பட. அறிவும் அதன் மூலம் நிறையும் ஆணவமும் அடிபடும்போது திறந்து கொள்ளும் மனதோடு சென்று நாடாரிடமே பணிந்து தன் ஆதாரப்பிழை என்னவென்று கேட்பவரிடம் மீண்டும் சொல்லப்படுகிறது “சொல்லிலே சுகம் கண்டுபிட்டீரு”.  “படிப்பு நல்லதாகும். ஆனால், பாம்பு மாதிரி ஒரே திக்கில் போகணும். நண்டு மாதிரி நாலுதிக்கும் போகப்பிடாது” என்பவரிடம் நீர்நோட்டம் காணும் கலையை கற்கிறார். அடுத்த தீவிரம் தொடங்குகிறது.  


இதிலும் முன்னும் பின்னும் அலைந்து வித்தை கைகூடாமல் தவிக்கிறார். கம்பை செரித்துகொண்டால் தான் அறியமுடியும் என்னும் நாடாரிடம் கோவித்துக்கொண்டு விலகி பின் அவரிடமே சென்று அழுகிறார். “இழுக்காதிய பிள்ளே,  இழுத்தால் வராது. வானத்தைப் பார்த்தால் பூமியை அறியலாம்” என்கிறார் நாடார். அத்தகைய ஒரு கணத்தில் வித்தை கைவரப்பட்டு அதன் பின் நிற்க இடமில்லாமல் எட்டு நாட்கள் எல்லா இடத்திலும் நீரையும், விலங்குகள் பறவைகளில் பேசும் மொழி எல்லாம் புரிய குச்சியுடன் அலைந்து நாடாரிடமே மீள்கிறார். “செயிச்சாச்சுல்ல, தூக்கிப்போட்டுட்டு சோலி மயிரப்பாரும்” என்கிறார் நாடார். இதிலும் பிள்ளைக்கு இரண்டாவது மணி இவ்வாறாக அடிக்கப்படுகிறது. அதை மறுத்து,  தீவிரம் தாளாமையால் இதிலிருந்து அறுத்துவிடச் சொல்பவரிடம், இனி பின்னால் செல்லமுடியாது என்று கூறும் நாடார், மண்ணைப் பார்க்க வேப்பங்கம்பு இருக்கே, விண்ணைப்பார்க்க என்ன வைத்திருக்கிறீர் என்று முன்னே செல்ல வழிகாட்டுகிறார். அறிந்தவன் அமைய வேண்டும் என்கிறார். அவ்விரவில் அமைந்த நாடாரைக் கண்டும், பிள்ளை மேலும் மேலும் அலைகிறார்.   திருமந்திரத்திற்கு நிலத்தடி நீர் சார்ந்து ஒரு உரை எழுதுகிறார். விரிந்து பரவிக்கொண்டேயிருக்கிறது அவ்வுரை -  நண்டு மீதும் நாலு திக்கும் அலைகிறது. 


ஒன்பது வருடங்கள் இப்படிக்கழிய ஒருநாள் சடைமுடிச்சாமியை மலையில் சந்திக்கிறார். உப்பு இருக்கிறதா எனக்கேட்பவரிடம் உப்பு கொண்டு நடப்பதில்லை என்கிறார். உப்பில்லா பண்டம் குப்பையில் என்பவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். தன் வியர்வையில் இருந்த உப்பை உணர்ந்து திரும்பிச் செல்கிறார். அங்கு சாமி இல்லை. அந்த இடத்தை தான் குச்சியை கொண்டு அறிய முற்பட்டு ஆழத்தில் வீழ்ந்து சொற்களை இழந்து நான் என்ற சொல்லில் எஞ்சும் போது சாமி வருகிறார். “வீட்டுக்கு போமய்யா” என்பகிறார்.  மூன்றாவது மணி. ஆனால், பிள்ளை மாட்டேன் என மறுக்கிறார். சரி அப்படியெனில் வேறெங்கும் தாவாமல் அந்த ஓரிடத்திலேயே அமர்க  என்று கூறிவிட்டு அவர் நீங்கிச்செல்கிறார், "பல மரம் கண்ட தச்சன்" என்ற நக்கலுடன். பிள்ளை சடைமுடிச்சாமி அளித்த மாம்பழத்தின் கொட்டையை அங்கேயே நல்ல நீரோட்டமுள்ள இடம் பார்த்து விதைத்து விட்டு, அங்கேயமர்ந்து முதிர்ந்து ஒடுங்குகிறார். 


மீண்டும் ஆண்டுகள் செல்கின்றன - குகைக்குள் வாழ்ந்து, மக்களால் குகைச்சித்தர் என்று வணங்கப்படுகிறார். ஆனால், அவர் தேடியது கிடைக்கவில்லை. அந்த மாவிதை செடியாகி மரமாகி கிளைவிரிந்து தொலைவிலிருந்து பார்ப்பவருக்கு தெரியுமளவிற்கு நிற்கிறது, ஆனால், பூக்கவில்லை. ஒருநாள் கனவுக்குள் கனவு காண்கிறார். அதில் அவர் மனைவி நாகம்மை வருகிறாள். விரித்த பனம்பாய் மறுபக்கம் சுருங்க அவரை உதவிக்கழைக்கும் பட்டப்பகலில் அவரோ காமம் கொள்கிறார். தன் அன்னையின் குரல் கேட்டு மீண்டும் சென்று படிக்கத் தொடங்குகிறார் விழித்துக்கொண்டு அதிர்ந்து தான் வேறாகி ஒரு தான் அழுவதையும் மற்றொரு தான் அதை பார்ப்பதையும் உணர்ந்து மலைவிட்டு இறங்குகிறார். சேருமிடம் ஞானமுத்தனின் வீடு. காண்பது அவரின் இளம் மருமகள் ஜென்சியை. 


வயதான ஞானமுத்தன் நான்கு மகள்களை காட்டிக்கொடுத்து, மகனுக்கு நல்ல பெண்ணை மணம் செய்வித்து, வீடு, வாகனம், வயல், தன் தனிமைக்கு ஒரு குடில் என  வசதியாக வாழ்கிறார். அவரைக்கண்டதும் “மாமரம் பூத்ததா” என இயல்பாகக் கேட்கிறார். இல்லை என்பரிடம் “அப்ப, அடி ஊற்று ஓடினா மட்டும் போறாது” என்கிறார். ஞானமுத்தனிடம் தான் தோண்டும் கிணற்றில் ஏன் தண்ணீரில்லை கேட்கிறார் பிள்ளை. “அகங்காராத்தை கொண்டு தோண்டினால் எப்படி தண்ணீர் வரும்?” என்பவரிடம் வழிகாட்டுமாறு கெஞ்சுகிறார் பிள்ளை. அவ்வப்போதைய தன் சிறிய பாய்ச்சல்களில் மனம் தேங்கிப்போய்விட்டால் இப்படித்தான், ஓடும் நீர்தான் கங்கை என்கிறார் ஞானமுத்தன். குழப்பத்தோடு உறங்கி விழித்தெழுந்து இருந்தும் இல்லாமல் வான் நோக்கி அமர்ந்திருக்கும் அவனைப் பார்க்கிறார் பிள்ளை.


அதன் பின், ஞானமுத்தனின் குடிசையில் தங்கி பிள்ளை தான் சொல் அனைத்தையும் - கற்ற சாத்திரங்களையும் உற்ற தத்துவங்களையும் ஒழிகிறார். அவர் அங்கு நட்டு வளர்த்த செடிகள் தளிர்க்கின்றன, சில மலர்கின்றன. அப்படி ஒருநாள் தன் அந்தியை உணர்கிறார். மயங்கிக்கிடக்கும் அவருக்கு நீரளிக்கும் போது அழுத்தும் ஜென்சியின் மார்பை உணர்ந்து தன் உயிரை உணர்கிறார். 


“சந்தான லட்சுமியாக இருப்ப” என்று தான் வாழ்த்திய அவளில் தன் அன்னையை, மனைவியை, தன் வாழா வாழ்வை அதன் கணங்களை காண்கிறார். நாகம்மையை, அவர் மகனை, அவன் தரும் இன்பத்தை பின் அவனால் அடையும் துன்பத்தை உணர்கிறார். அவர் மகனும் அவரைப்போல எழுதி வைத்ததைப் படித்துவிட்டு எளகியாடுவதை, தன் பேத்தியை, அவள் கையால் தான் இறுதி நீரை கொண்டு நிறைந்து உயிர் துறப்பதை எல்லாம் உணர்கிறார். கூப்பிய தாமரை இதழ் விரிக்கிறது. கிட்டத்தட்ட மறுபிறப்பு & முழுவாழ்க்கை - அன்னையின் முலையில் தொடங்கி பேத்திவிட்ட நீரில் நிறைவு. நிறைகிறார். 


ஞானமுத்தன் அவர் சாம்பலை அந்த மாமரத்தில் குழியெடுத்து அடக்கும் போது முப்பது வருடங்களுக்குமுன் பசுமையின் நீர்மை சொன்ன சொல்லை நினைத்துக்கொள்கிறார் - “எல்லாம் ஒன்றே”,


நிறைந்த மனதுடன் மறைந்தவரின் சாம்பல் கொண்டு காய்த்துப்  பொங்குகிறது மாமரம்.


இந்நூலின் பல சித்தர் பாடல்கள் பகடிகளாக பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு ஒருசில பாடல்களை அதன் உண்மை அர்த்தத்தில் எவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்த போது  பகடி வெடித்துச்சிரிக்க வைத்தது. “சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம்பலம் தேடி உட்கார்ந்து விட்டீர்" என்னும் ஞானமுத்தன். பெண்போகம் / மயக்கம்  குறித்த வரிகள், etc.  அதுவும் ரெஜினா டீச்சரின் “அணுவைத் துளைச்சு ஏழ்கடலைப் புகட்டி குருகத் தரிச்சு குமட்டின குத்துன ஆளுல்லா”. விடிகாலை வேலையில் விளக்கைப் போட்டுக்கொண்டு பால்கனியில் செடிகளுக்கு நடுவே அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். சிரித்த சிரிப்பில், அப்போது நடைக்கு வந்த நாயும் அது இழுத்து வந்த அம்மையாரும் அதிர்ந்து போயினர்.

 

வாசித்தவற்றோடு இணைத்துக்கொள்ளும் ஒரு வழக்கத்தில், ஒரு கோணத்தில் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா நாவலில் வரும் கோவிந்தனை பிள்ளை நினைவுபடுத்துகிறார். ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதில் ஒரு அமைப்பில் நீண்ட காலம் அமர்ந்து பெரிய முன்னேற்றமில்லாத வாழ்க்கை என்றளவில்.


இந்நூலை விவாதிப்பது குறித்து டாலஸ் நண்பர்களுக்குள் இருவேறு கருத்துகள் இருந்தன. பல்வேறு விதமான வாசிப்பு வரலாமே, முயன்று பார்ப்போம் என்றுதான் தொடர்ந்தோம். அது பயனளித்தது என்றே எண்ணுகிறேன்.


ஈராறு கால் கொண்டெழும் புரவி என்பதை நான் “மனம்” என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் அதை “காலம்” என்ற பொருளில் திருமூலர் பயன்படுத்துகிறார் என்று நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதாக நண்பர் சரவணன் கூறினார். அதுவும்  சரியாக பொருந்தி வருகிறது. 


என்னளவில், கற்றவற்றை சுமந்து கொண்டேயிருப்பதால் சென்றடையாமல் தேங்கி நிற்கும் உணர்வு  அளிக்கும் அச்சம், அடைந்தவர்கள் கூறும் அமைந்து வாழ்தல் போன்றவைகள் குறித்து மேலும் யோசிக்கத்தூண்டியது இந்நூல். குறிப்பாக, ஆரம்பத்திலேயே நாடார் கூறுகிறார் “தேடாதேரு. தேடிக் கிட்டுத ஒண்ணுமே தேடுகதுக்குண்டானது இல்லை. தேடிவாறதே செல்வம்.” 


ஆனால், தேடும் வரை எல்லாவழிகளிலும் முயல்வது, முழுமையாக முயன்று கொண்டேயிருப்பது, எல்லைகளை விஸ்தரிப்பது,   அடையவில்லையெனினும் இறுதியில் ஒரு நிறைவு உண்டு என்றும் ஒரு வாசிப்புக்கோணம் நண்பர்களிடம் இருந்து வந்தது.    


ஒருவேளை ஞானமுத்தன் உணர்ந்தது போல, “எல்லாம் ஒன்றே” ஆக இருக்கலாம்.


அற்புதமான அனுபவத்திற்கு நன்றி ஜெ.


ஜெயமோகனின் தளத்தில் வாசிக்க

பன்னிருகால் புரவி!

Comments

Popular posts from this blog

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வெண்முரசு ஆவணப்படம் - ஆஸ்டின் திரையிடல்

சஞ்சய் என்னும் பெருஞ்சூதன்