"நக்குபு புக்கும்" டாலஸ் பூனைகள்...
கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பூன் முகாமிலிருந்து திரும்பியபின் நண்பர்கள் இணைந்து டாலஸில் இருவாரத்துக்கொருமுறை என சந்தித்து எங்கள் இலக்கிய வாசிப்பை பகிர்ந்துகொள்கிறோம். அதன் முதலாம் ஆண்டு நிறைவை கிட்டத்தட்ட ஒரு விழாவாகவே கொண்டாடினோம். நண்பர்கள் பிரதீப்பும் அன்னபூர்ணாவும் இதுகுறித்து ஜெயமோகனுக்கு எழுதியிருந்தார்கள்.
வெவ்வேறு விதமான வாசிப்பு முறையும் ரசனையும் கொண்ட நண்பர்களுடன் ஒரு படைப்பு குறித்து விவாதிப்பது என்பது ஒரு பிரதியை முழுமையாக அணுகியறிய பெரியளவில் உதவுகிறது. கொண்டும் கொடுத்தும் என ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் பெருமலர்ச்சியுடன் தான் திரும்புகிறோம்.
பெரும்பாலும் ஜெயமோகனை மட்டுமே படித்துக்கொண்டிருந்த எனக்கு வேறு சில முன்னோடிகளை வாசிக்கும் வாய்ப்பு இங்குதான் கிடைத்தது. புதுமைப்பித்தன் எல்லாவகைமையிலும் ஒரு முன்னோடி என்று ஜெ சொல்வது தெளிவாகப் புரிந்தது. அவரைத் தொடர்ச்சியாக வாசித்த நாட்களில் அவர் கதை போல் இருக்கும் மற்றொரு நவீன ஆசிரியர் அல்லது ஆக்கம் என்ன என்று யோசிப்பது எங்களுக்குள் சுவாரசியமான போட்டி. வெளியிடங்களில் எங்காவது காத்திருக்கும் போது கிடைக்கும் நேரத்தில் சென்று இவரின் சிறுகதைகளைப் படித்து கிறுக்கு போல் சிரித்தும், பயந்து நடுங்கிக்கொண்டும், நேரம் மறந்து யோசித்துக்கொண்டு சென்ற காரியத்தை விட்டுவிட்டு திட்டு வாங்குவதும் எனக் கழிகிறது காலம்.
அசோகமித்திரனின் படம் ஜெயமோகனின் அறையில் இருப்பது ஏன் என அறிந்துகொள்ள அவரின் சில சிறுகதைகளே போதுமாயிருந்தது. சில சிறுகதைகள், கதையே இல்லையே என்ன சொல்ல வருகிறார் என்று குழம்பி சென்றால், நண்பர்கள் அளிக்கும் திறப்பும் கிடைக்கும்; புரிந்துவிட்டது என மகிழ்ந்து சென்றால் அதையே வேறொரு விதத்தில் விளக்கும்போது திகைப்பும் கிடைக்கும். எனினும், சில நண்பர்களுக்கு யதார்த்தவாத கதைகள் போதவில்லை என்ற ஒரு எண்ணம் இருந்தும் பிடித்துப்போன நண்பர்களுக்காக பத்து அமர்வுகளுக்குமேல் முழுமையாக கலந்து கொண்டனர். இறுதியில் வாசித்த நாவல் “பதினெட்டாவது அட்சக்கோடு”, பெருமளவில் எல்லோருக்கும் பிடித்துப்போனது.
குறிப்பிட்ட இடைவெளியில் காபிக்கு கை நடுங்குவது போல அல்லது பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்குப் போவது போல என ஜெயமோகன் படைப்புகளையும் விடாமல் விவாதிக்கிறோம்.
மூன்று ஆண்டுகளுக்குமுன் அலுவலகத்தில் பலரை பணியிலிருந்து விடுவித்தார்கள். எஞ்சியிருந்த மிகச்சிலரோடு வேலை செய்ய தொடங்கிய சிலநாட்களிலேயே பெருமளவில் சண்டைகள் / அபிப்ராய வேறுபாடுகள் என்று ஒரு கசப்பான நிலை நிலவியது. அது குறித்து யோசிக்கும்போது தோன்றியது, எஞ்சி இருப்பவர்கள் தன்னளவில் திறமையானவர்கள் - அவர்களுக்கென்று ஒரு வழிமுறை, வேலை செய்யும் முறை என அமைத்துக்கொண்டவர்கள். அதிலிருந்து வேறுபடுபவர்களுடன் கடுமையாகவே இருந்தார்கள். My way or the highway என்பதுதான் நிதர்சனமாக இருந்தது. ஆனால், இன்றைய பொழுதும்போக்கும் வீடியோ காலத்தில், எதையேனும் வாசிப்பவர்கள் நிச்சயமாக தன்னளவில் அரிதானவர்கள் தான். அத்தகையோர் உள்ள ஒரு குழுவில் இருக்கும் இணக்கமும் புரிந்துணர்வும் ஆச்சர்யமூட்டுமளவிற்கு இருப்பினும், வெண்முரசு வாசகர்கள் அவ்வாறு இல்லை என்றால்தான் ஆச்சர்யம். எந்த ஒரு அமைப்பிலும் சிறிது நாட்களிலேயே தோன்றும் ஒவ்வாமையோ மனக்கசப்போ - ஏன், அவைகுறித்த ஒரு எண்ணக்கீற்றோ கூட இல்லாமல் முற்றிலும் நேர்மனநிலையோடும் செயலூக்கத்தோடும் மட்டுமே உடன்பயணிக்கும் நண்பர்கள் இங்குதான் எனக்கு வாய்த்தார்கள். இணைமனங்களின் அருகாமை தரும் மகிழ்வு, மெல்ல குடும்பங்களிலும் பரவி அவர்களும் வாசிப்பிலும் சந்திப்பிலும் கலந்து கொள்கிறார்கள்.
புதிய நண்பர்களும் அவ்வப்போது இணைகிறார்கள். நாங்கள் தொடங்கியபோது சந்தித்துக்கொண்டிருந்த நூலக அறை போதாமல் வேறொரு பெரிய அறையுள்ள நூலகத்திற்கு மாற்றியிருக்கிறோம். மேலும், நண்பர்களை வரவேற்கிறோம். vishnupuramusa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.
கூடுதலாக, 2026 முதல், நண்பர்களில் பலருக்கும் வெகுநாட்களாக ஆசையாயிருந்த கம்ப ராமாயண வாசிப்பை துவங்கியிருக்கிறோம். அங்குமிங்குமாக கேட்கும் சில பாடல்கள் அளிக்கும் பரவசம், நாஞ்சில் நாடன் அவர்களின் வகுப்பு காணொளிகள், சென்ற ஆண்டு டாலஸில் நடந்த ராஜனின் கம்பராமாயண இசைக் கச்சேரி, அதில் பழனி ஜோதி அண்ணனின் பாடல் விளக்க உரை என பலவும் தொடர்ந்து ஆசையைத் தூண்டிக்கொண்டிருந்தாலும், எப்படி தொடங்குவது என்று யோசித்துக்கொண்டேயிருந்த போது நண்பர் பாலாஜி, “வெண்முரசு எனும் காவியத்திலிருந்து இன்னொரு காவியத்துக்கு செல்வதுதானே முறை. நாமே முயற்சித்துப் பார்த்தல் என்ன?” என்றார். சரியென ஆரம்பித்துவிட்டோம். சென்று பார்த்தால், அங்கே எங்களைப்போலவே “ஓசை பெற்று, உயர் பாற்கடல் உற்று” வெறும் ஆசையால் மட்டுமே அதை முழுதும் நக்கித் தீர்க்க முயலும் பூனையை கண்டுகொண்டோம். “நாங்களும் வருகிறோம், மூத்தவரே” என்று அவரை வணங்கித் தொடங்கியுள்ளோம். வாரம் ஒருமுறையென எண்ணியிருக்கிறோம். உங்கள் நற்சொற்களை வேண்டுகிறோம்.
முதல் சந்திப்பில், 11 பாடல்களை பற்றிய எங்கள் வாசிப்பை எண்ணிப்பார்த்தாலே வெவ்வேறு உரையாசிரியர்களின் பல்வேறு உரைகளின் மேலும், இன்றைய நவீன கவிதை வாசகன் பெற்றுக்கொள்ளவும் சில விஷயங்களை கண்டுகொள்ள முடிந்தது.
என்றும் எங்களை மேன்மையில் இட்டுச்செல்லும் ஆசிரியர் ஜெயமோகனுக்கு நன்றி.
ஜெயமோகனின் தளத்தில்
.jpeg)
Comments
Post a Comment