ஆஸ்டின் சௌந்தர்
சென்ற ஆண்டு பூன் முகாமில் பங்கேற்றதின் பெறுமதிகளில் ஒன்று இணைமனங்கள். இணையம் வழியாகவும் நேரிலும் நண்பர்களுடன் உரையாடுவதும் வாசிப்பை பகிர்ந்துகொள்வதும் புரிதலை பல மடங்கு அதிகரிப்பதை தினமும் அனுபவிக்கிறேன். வாசிப்பென்றால் பேஸ்புக்கில் செய்வது, கவிஞர் என்றால் வைரமுத்து என்ற சுற்றத்துக்கு நடுவே கிடந்து தவித்துக் கொண்டிருந்த எனக்கு உங்கள் வாசகர்களை சந்திக்கும் முதல் வாய்ப்பு 2021 இல் ஆஸ்டின் நகரில் வெண்முரசு ஆவணப்பட திரையிடலில். கோவிட் நோயச்ச காலமாதலால் முகக்கவசம் அணிந்தவர்களிடையே தனியாக பேசிக்கொள்ள இருந்த மனத்தடையால் பெரிதாக எனக்கு யாருடனும் தொடர்பு ஏற்படவில்லை. சில பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தது. எங்களை இணைத்த அடுத்த நிகழ்வு ஜெயமோகனின் 2022 அமெரிக்க வருகை. அங்கு சந்தித்த நண்பர்கள் தொடர்பில் இருந்தாலும் நாங்கள் தன்னளவில் வாசித்துக்கொண்டிருந்தோமே தவிர இணைந்து பெரிதாக எதுவும் செய்யவில்லை. 2023 இல் ஜெயமோகனுடன் ஒருநாள் முழுதும் சான் ஆன்டோனியோ நகரைச் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது, பலவகையில் என்னளவில் ஒரு மிகப்பெரிய திறப்பு. பின்னர் 2024 பூன் முகாம் மேலும் பல நண்பர்களை அறிமுகப்படுத்தியது. அவர்கள் வெறும் வாசகர்கள் மட்டுமில்லை. சிலர் எழுத்தாளர்கள், ஓவியர், இணையப் பத்திரிக்கை நடத்துபவர்கள், மொழிபெயர்பாளர்
குறளினிது உரையில் ஜெயமோகன் குறிப்பிட்டது போல நவீன வாசகன் என்பவன் ஒரு துடுக்குத்தனமும் தன்முனைப்பும் மிகுந்தவன். அப்படிப்பட்ட ஆட்களுள்ள ஒரு குழுவை மிகச்சரியாக கையாண்டு அவர்களின் தனித்திறன்களை அறிந்துகொண்டு அதை சரியான வழியிலும் அளவிலும் அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகளுக்காக ஒருங்கிணைக்கும் சவாலான பணியை மிக எளிதென்று தோன்றச்செய்யும் திறமைசாலி. எங்களில் பலரும் அவரை பெரியண்ணன் என்றே தான் குறிப்பிடுகிறோம். பகடியாக மட்டுமில்லை, பலரும் அவ்வண்ணமே உணர்வதாலும் தான்.
தனிப்பட்ட உரையாடல்களில் நாங்கள் செய்யக்கூடுவதை எங்களுக்கு உணர்த்துவது அவரது ஒரு பெரிய திறமை. வெண்முரசு வாசிப்பில் பாதியில் நின்றிருந்த என்னை 2021 இல் முழுவதையும் வாசித்து முடிக்க வைத்தது , 2022 இல் தொடர்ந்து எல்லா நாளும் தமிழ் விக்கி பதிவுகளை வாசித்து இணையத்தில் பகிர வைத்தது, நண்பர்களின் குறிப்புகளை படித்து மேலும் எழுதத்தூண்டுவது என பல உதாரணங்கள் நினைவில் எழுகின்றன.
இவ்வருட பூன் முகாமிற்கு பின் டாலஸ் நண்பர்கள் பிரதீப், பாலாஜி, குறள் செந்தில் மற்றும் நான் என ஒரு குழு இரண்டு வாரத்திற்கு ஒரு முறையென சனிக்கிழமை மதியம்தோறும் ஒன்றுகூடி விவாதிக்கிறோம். இமைக்கணம் 5 பகுதிகள் கடந்துள்ளன. பழைய சந்திப்பில் நண்பர்கள் வெங்கட் & சரவணன் எங்களுடன் இணைந்துள்ளனர். ஏற்கனவே வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் உள்ள இடைவெளி மிகப்பெரிது. யோகம் என்பதன் பொருள் விளங்குகிறது. இதற்கும் எங்கள் கிரியாயூக்கி சௌந்தர் தான்.
அப்படி ஒரு வாரத்தில் ஆஸ்டின் நண்பர் ஸ்கந்தாவின் அழைப்பின் பேரில் சௌந்தர் அவர்களின் புதிய தொடக்கங்களை கொண்டாடும் விதமாக ஆஸ்டின் செல்வதாக முடிவுசெய்தோம். பலமுறை காரில் சென்றிருந்தாலும், இம்முறை நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே சென்றது நேரம் போனதே - டெக்சஸ் ஓட்டுநர்கள் வேகவிதிகளை மதிப்பதில்லை என்னும் அவப்பெயரை துடைப்பதாக உறுதியேற்றிருக்கும் நண்பர் பிரதீப் ஓட்டியும் கூட - தெரியவில்லை.
எங்களுக்கு முன்னரே வந்து காத்திருந்தாலும் மலர்ச்சியுடன் எங்களை வரவேற்று பேசிக்கொண்டிருந்தவரை பணி ஓய்வு பெற்றவராக காணும் எண்ணமே வரவில்லை. என் மனைவியின் தந்தையின் பெரிய நண்பர்கள் குழுவில் ஒவ்வொருவராக ஓரிரு மாத இடைவெளியில் பணி ஓய்வு பெற்றனர். விழா ஒரேமாதிரிதான் – இரண்டு உருளைக்கிழங்கு போண்டாக்கள், தேநீர், சென்றகால சாதனைகள், உலகமே முடிந்துவிட்டதாக கண்ணீர். இவ்வளவு நாட்களும் பணி ஓய்வு என்றாலே தோன்றுவது இந்த காட்சிகள்தான். ஆனால், நேர்மாறாக சௌந்தர் ஓரிரு ஆண்டுகள் முன்னரே இந்த நாளை திட்டமிட்டு செயல்படுத்தியது எப்படி, இனி செய்யப்போகும் செயல்கள் என முன்னிலும் உற்சாகத்துடன் பேசியது ஒரு பெரிய மகிழ்வான தருணம். அவரை இத்தாலிய பயணத்திற்கு பழக்கும்விதமாக ஒரு இத்தாலிய உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்கந்தா. நண்பர் கிரியும் எங்களுடன் இணைந்து கொண்டார்.
பின்னர் சௌந்தர் அவர்களின் இல்லத்தில் உள்ளே நுழைந்ததுமே "உங்களின் நூலகத்துக்கு செல்வோம் சார்" என்றதும் "இப்படி கேட்பவர்கள் ரொம்ப குறைவு" என்று உற்சாகமாகிவிட்டார். அன்று காலையில்தான் என் எட்டடுக்கு நூலகத்தை நண்பர்களுக்கு பெருமையுடன் காட்டியிருந்தேன். இங்கே பதினாறு அடுக்கு. சரிதான்.
எட்கர் ஆலன் போவின் “The Raven” எனும் புகழ்மிக்க கவிதையின் வரும் ரேவன் கிரேக்க அறிவுத்தெய்வம் அதீனாவின் மீதமர்ந்து கூறும் “Nevermore” எனும் சொல்பொறித்த ஒரு சிறு சிலையை அவருக்கு பரிசளித்தோம். இதுகுறித்து ஒரு சிறு உரையை பிரதீப் நிகழ்த்தினார். அவர் சொற்களில் “அறிவுசார் புலத்தில் ஈடுபடும் ஒருவருக்கு அன்றாட mundane பணிக்கு Nevermo
ஆஸ்டின் பயணம் குறித்து பேச ஆரம்பித்தவுடனேயே ரவுண்ட் ராக் சென்று புகழ்பெற்ற "ரவுண்ட் ராக் டோனட்ஸ்" கண்டிப்பாக வாங்குவோம் என்ற உறுதிமொழியைப் கோரினார் நண்பர் பாலாஜி. அன்றுதான் சுடர்வு வாசித்திருந்தோம். "ஒரு துளி இனிமையைக்கூட கைவிடவேண்டியதில்லை. ஒரு கணத்து அழகைக்கூட மறுதலிக்கவேண்டியதில்லை. " என்ற இளையயாதவரின் மொழியை துணைகொண்டு எல்லோரும் ஒப்புக்கொண்டோம். டாலஸ் திரும்பும்போது, வண்டி நின்றது அங்குமட்டும்தான். வேறெங்கும் இடைநில்லாமல் புயல் வேகத்தில் ஓட்டிக்கொண்டுவந்து டெஸ்சஸ் ஓட்டுனர்களின் பிறப்புரிமையை நிறுவினார் பாலாஜி. இத்தனைக்கும் நாங்கெல்லாம் எல்லோரும் ராதா அவர்கள் கொடுத்த காபி குடித்தபோது அவர் வெறும் வெந்நீர் மட்டும் தான் குடித்திருந்தார் .
அண்மையில் ஒருநாள், "இந்த புக் கிளப் போறதுலேந்து நீ ரொம்ப ஹாப்பியா இருக்கப்பா" என்று என் மகள் கூறினாள். அதை எண்ணிக்கொண்டிருந்தபோது தோன்றியது இந்த மகிழ்ச்சி செயலால் நிறைத்துக்கொள்ளும் நண்பர்களின் சுற்றமும் செயலும் தரும் மகிழ்ச்சி என. அப்பொழுது சௌந்தர் அவர்களின் மலர்ச்சியின் பொருள் புரிந்தது. எங்கள் மூத்தவருக்கு வணக்கங்களும், அவர் செயல் சிறக்க வாழ்த்துகளும். அவரின் இனிய குடும்பத்துக்கு சிறப்பு வாழ்த்துகள்.
ஜெயமோகன் தளத்தில்

Comments
Post a Comment