மதுரம் - ஜெயமோகன் சந்திப்பு
மார்ச் மாதத்தில் ஒரு நாள் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் அழைத்து ஜெயமோகனின் அமெரிக்க வருகையைக் குறித்து கூறியவுடன் எழுந்த பரவசமும், எதிர்பார்ப்பும் கற்பனைகளும் , ஒத்திகைகளும் எல்லாம் ஒன்றுமே இல்லை எனுமளவிற்கு இனிமை இனிமை இனிமை என கழிந்தது மே 17, 2022.
அவர் தளத்தில் நிரல் அறிவிக்கப்பட்டவுடன் டாலஸ் திட்டத்தைக் கேட்டு சௌந்தர் அவர்களை தொல்லைப்படுத்திக்கொண் டிருந்தேன். என்னைப்போல் வேறு சிலரும் கேட்டுக்கொண்டிருந்தாலு ம் எல்லோருக்கும் பொறுமையாகவும் விரிவாகவும் சலிக்காமல் பதிலளித்து நல்ல ஒரு சந்திப்பை ஒருங்கிணைத்த சௌந்தர் அவர்களுக்கும் ஆனந்த் அவர்களுக்கும் நன்றிகளும் பாரா ட்டுகளும்.
அலுவல்களை திட்டமிட்டு முடித்து, இரண்டு வாரங்களாக குறிப்பிடத்தத்தக்க பணிகள் எதுவும் இல்லை என்பதை வார்த்தைகளாக்கி மேலாளரின் தலையில் மீண்டும் மீண்டும் நிறுவி அவர் பொறுமையிழந்த வேளையில் மூன்றுநாள் விடுப்பு கேட்டவுடன் அவரே மகிழ்ந்து "தொலைந்து போ சாத்தானே" என்று விரட்டிவிட்டார். எங்கள் வாழ்வில் ஜெயமோகனின் இடமும் இருப்பும் முழுதுணர்ந்த மனைவியும் மகள்களும் விரிவாகத் திட்டமிட்டு காத்திருந்தனர். புதிய குறிப்பேடு ஒன்றை வாங்கி அதில் தனது கவிதைகளை எழுதி வைத்தார்கள் மீனாக்ஷியும் ஜனனியும்.
எனக்குத்தான் அவரிடம் என்ன பேசுவது கேட்பது என்று ஒன்றும் பிடிகிட்டவில்லை. தொடர்ந்து அவர் தளத்தை வாசிப்பதாலும், உரைகளைக் கேட்பதாலும் என் கேள்விகளுக்கு விரிவான விடைகளைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறேன். அதுவும் வினா எழுந்த சில நாட்களிலேயே பதிலாக ஒரு புதிய பதிவோ இல்லை பழைய பதிவின் சுட்டியோ இயல்பாகவே என்னை வந்தடையும். எனினும், அண்மைய பெருநிகழ்வான தமிழ் விக்கியைக் குறித்த ஒரு கேள்வியை, சரியாக கேட்கவேண்டுமென, இரண்டு நாட்கள் அமர்ந்து எழுதியெடுத்து வைத்திருந்தேன். மறுநாளே அதற்கான விரிவான பதிலை ரம்யாவின் "பெரும்பணியில் இருத்தல்" பதிவில் கண்ணீர் மறைக்க வாசித்தேன்.
சந்திப்பன்று வரும் வழியில் உண்டான ஒரு அச்சமும் பதட்டமும் கலந்த ஓர் உணர்வில் மகள்களுக்கு சொல்வதாக எனக்கே சொல்லிக்கொண்டேன் - "பெரியவங்ககிட்ட மரியாதையா பேசணும், கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லணும், அவங்க விளையாட்டா பேசுறாங்கன்னு நீங்களும் விளையாடக்கூடாது ...". இவ்வளவும் சொன்னபின் "அவரை எப்படிம்மா கூப்பிடுவ" என்று ஜனனியிடம் கேட்டேன். அமெரிக்கப் பழக்கமான தோள்களைக் குலுக்கிக்கொண்டு "ஜெயமோகன்னு தான்... any problem ?" என்றாள். சரிதான், மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா எனத்தோன்ற அப்படியே விட்டுவிட்டேன்.
என் வாழ்வில் - இளையராஜாவின் பாதங்களை தொட்ட பொழுது, மதுரையில் அம்மையின் முன் என - மிகமிகச்சில கணங்களிலேயே என் தன்னுணர்வு முழுதும் அடங்கி பேரமைதி வசப்பட்டிருக்கிறது. காரிலிருந்து இறங்கி வந்த ஜெயமோகனைக் கண்ட கணம் அத்தகைய ஒன்று. அனிச்சையாக அவர் பாதம் தொட்டு நிமிர்ந்தபின் சில நொடிகள் கழித்து "உங்க பேரு சொல்லலியே " என்ற அவரின் கேள்வியில் தான் நிலை மீண்டேன். "ஓ, மூர்த்தி டல்லாஸ்" என்று சினேகமாக அணைத்துக்கொண்டார். பரவசத்தில் ஒன்றும் ஓடவில்லை.
Cozby நூலகத்தின் அறைக்குள் நுழைந்து ஜனனி அளித்த பூங்கொத்தைப் பெற்றுக்கொண்டு அவர் அவளிடம் பெயரைக் கேட்க அவளோ "என் பெயர் ஜனனி" என்று சுத்தத்தமிழில் சொன்ன பதிலைக் கேட்டு "தமிழ்ல சொல்லிட்டாளே" என்று மகிழ்ந்து சிரித்த ஜெயமோகனுக்கும் நண்பர்களின் கே ள்விகளுக்கு கூர்மையாக விடையளித்த ஜெயமோகனுக்கும் இருந்த வித்தியாசத்தை வியந்து கொண்டிருந்தேன். கேட்பவர்களின் போதாமைகளைத் தவிர்த்து அவர்கள் அடிப்படை வினாவைத் தொட்டெடுத்து அவர்கள் கேள்வியை முடித்த மறுகணம் விரிவான தர்க்கபூர்வமான பதிலளிக்கும் ஆற்றல், சரியான எடுத்துக்காட்டுகளுடன் அல்லது உவமையுடன் எளிதாகப் புரியச்செய்தல் , கேட்பவர்க்கும் மேலே சிந்திக்க ஒரு சிறு இடமளித்து நிறுத்துதல் என மிக மகிழ்வான இரண்டு மணி நேரங்கள் கழித்து அவரிடம் கையெழுத்துக்காக கொற்றவையை நீட்டினேன். இரண்டு மணி நேரத்துக்கு முன் ஒரேயொரு தடவை கேட்ட என் பெயரை எழுதி அவர் கையெழுத்திட்டபோது அதிர்ச்சியும், பின் "அப்படித்தானே..." என்ற ஒரு எண்ணமும் தோன்றியது.
அருண்மொழி அக்கா அவர்களையும் ராஜன் சோமசுந்தரம் அவர்களையும் சற்று தாமதமாகவே உணர்ந்து கொண்டு ஓரிரு வார்த்தைகளே பேசமுடிந்தது. அவர்களிடம் அதுகுறித்து ஒரு பொது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஐந்தாண்டு கால டாலஸ் வாசத்தில், சந்திக்கும் தமிழ் பேசுபவர்களிடமெல்லாம் வாசிப்பீ ர்களா என்று கேட்டு ஒரே பதிலையே பெற்றிருக்கிறேன். அத்தகைய ஒருவனுக்கு வாசிக்கும், அதுவும் ஜெயமோகனை வாசிக்கும் மேலும் சிலரைக் கண்டது பெரு மகிழ்ச்சி. நண்பர் பிரதீப் ஒரு வாட்சப் குழு துவங்கியுள்ளார்.
ஜெயகாந்தன் கூறியதைப்போல "ஞானம் என்பது பீடமல்ல, கிரீடம்." அந்தக் கிரீடத்தைத் தரித்திருக்கும் பேராற்றலென திகழும் அவரே என் சிறுமகளும் ஒரு வாரம் கழித்தும் மகிழும் வண்ணம் உரையாடிய இனிமையான மனிதராக இருக்க ஒரு பெருங்கருணை வேண்டும். ஒரு வாரம் கழிந்த பின்னும் கூட, அவர் அவளை கண்ணில்படும் போதெல்லாம் அருகழைத்து அணைத்துக்கொண்டதைக் கூறி அவள் அக்காவை வம்பிழுத்துக்கொண்டிருக்கிறாள்.
சந்திப்பு முடிந்து ஒரு கூட்டமாக எல்லோரும் அருகிலிருந்த உணவகத்துக்குச் சென்றிருந்தோம். மனதளவில் சோர்வாக உணரும் ஒரு காலத்தை மெல்ல கடந்து கொண்டிருந்த நான், இந்த நேரத்தில் அவரிடமிருந்து ஒரு ஊக்கச் சொல்லையோ அல்லது ஒரு கடுஞ்சொல்லையோ பெற எண்ணி, "ஆகவே செயல் புரிக" என்று எழுதி அதனடியில் அவரிடம் கையெழுத்து பெறவேண்டுமென தோன்றியது. எனினும், இயல்பாக வரும் அவர் சொற்களை மறிக்குமென எண்ணி அவ்வெண்ணத்தைக் களைந்தேன். அன்று மதியம் உணவு மேசையில் ஒரு ஓரமாக அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இயல்பாக மதியம் ஒன்றரை மணிக்கு அடிக்கும் மணியடித்து தளத்தில் நுழைந்தேன். அன்றைய " தமிழ்விக்கி, இறுதிச்சொல்" பதிவு இவ்வாறு முடிந்திருந்தது - "ஆகவே செயல்புரிக!"
"அவரோட ஆஸ்டின் போறேன்னு சொன்னியே போகலையப்பா?" என்ற மகளிடம் "இல்லம்மா, இதுவே போதும். இதுக்கு மேல எனக்குத் தாங்காது " என்று கூறியது என்றேனும் ஒருநாள் அவளுக்கு புரியலாம்.

Comments
Post a Comment