எழுத்துரு -அனுபவத்தில் இருந்து…

ஜெயமோகனின் "எழுத்துரு" என்ற கட்டுரை மிகவும் புகழ்பெற்றது. அதாவது, பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது. அதனால், அவர்கள் தமிழில் படிப்பதில்லை. ஆனால், அவர்களால் பேசவும் தமிழ் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் முடியும். எனவே, தமிழை ஆங்கில லிபியில் எழுதினால் என்ன? என்பதை தனக்கேயுரிய தர்க்கபூர்வமான முறையில்  2013இல் எழுதியிருந்தார். 

ஏற்றும் மறுத்தும் பல கருத்துகள் வெளியாகின.  

அந்த எண்ணத்தை அப்பொழுது  என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. இப்போது எண்ணிப்பார்க்கையில் அது ஒரு உணர்வு ரீதியான மேட்டிமை தான் காரணம் - என் மொழி, என்னால் படிக்க எழுத முடியும் , என் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியும் என்றே எண்ணினேன். பெங்களூருவில் பணியாற்றியபோது என் மனைவி கற்பிக்கவும் செய்தாள்.

சில ஆண்டுகளில் அமேரிக்கா  வந்த பிறகும்  கற்பித்தல் தொடர்ந்தது. ஆனால் கற்றலின் ஆர்வம் குறைவதை கண்கூடாகக் கண்டேன். மெல்ல மெல்ல மகள்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியாக ஆங்கிலம் ஆகியது. இழுத்து வைத்து கற்பித்தலும் பெரியளவில் உதவவில்லை.

இவ்வாறாக சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் சிவாஜி கணேசன் வடிவில் ஒரு திறப்பு. திருவிளையாடலில்  "கொங்குதேர் வாழ்க்கை " பாடலை முடிக்கும் போது "இதுதான் எமது செய்யுள்ள்ள்ள்" என்று முடித்தவுடன் சின்னவள் தன்னிச்சையாக "Wow, this  is nice , what is that seyyulll paa ? " என்றாள்.




செய்யுள் என்றால் என்ன, எதுகை மோனை எல்லாம் விளக்க ஒரு சிறு பாடலை எழுதிக் காட்டி நீயே படிச்சு சொல்லு என்று ஆங்கிலத்திலும்  எழுதிக் கொடுத்தேன். வியப்பூட்டும் வகையில் வேலை செய்தது. மட்டுமல்லாமல் அவர்களே மேலும் சில என்று கேட்க, இப்போது தினமும் ஒரு மணிநேரம் இனிமையாகக் கழிகிறது.

வார இறுதியில் இன்று தமிழ்ப்பாடம் இல்லை என்றதும் சுணங்கும் அளவிற்கு, அவர்களே இன்று என்னை இழுக்கிறார்கள். "மதுகரம் வாய்மடுக்கும் குழற்காடு " என்னும் படிமம் அவர்களுக்கு பிடிபடுகிறது. "வேற யாராலயும் முடியுமா, என் பொண்ணுடி " என்று பெருமை பேசிக்கொண்டிருந்த வேளையில், "அப்பா, Remember யான் எனது என்பவரை கூத்தாட்டுவான்ப்பா  " என்று எடுத்துக்காட்டிய போது ஜெயமோகனின்  எழுத்துரு கட்டுரையும் கருத்துக்களுமே நினைவில் எழுந்தது. 

ஐந்தாண்டுகளுக்குப்பிறகு இப்படி ஒரு தோன்ற "ஆசானே, பொறுத்தருள்க "  என்று எழுதி  அனுப்பிவிட்டேன்.

அவர் தளத்தில் வெளியிட்டு ஒரு பதிலும் அளித்திருக்கிறார். 

Comments

Popular posts from this blog

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வெண்முரசு ஆவணப்படம் - ஆஸ்டின் திரையிடல்

சஞ்சய் என்னும் பெருஞ்சூதன்