வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021
2021ம் ஆண்டின் வெண்முரசு நாள் இணைய வழி உரையாடல் ஜூலை 23ம் தேதி ஒருக்கப்பட்டிருந்தது. சென்றாண்டின் அதே பரவசத்தோடு இப்போதும் இணைந்து கொண்டேன்.
திறந்தவெளியில் நிலவொளியில் வெண்ணிற ஆடை என இயற்கையுடனும் / மரபுடனும், சுற்றிலும் இரண்டு மடிக்கணினி, ஹெட் செட் என நவீன கால கருவிகளுடனும் அவர் உரையாற்றியது கிட்டத்தட்ட அவர் குறித்த ஒரு படிமம் ஆகவே தோன்றியது. வியாசன், கம்பன் என்னும் மரபின் தொடர்ச்சி, அவர்தம் காவியங்களை நவீன காலத்தில் மருவுருவாக்கும் பேராசான். வெண்முரசு & குரு பூர்ணிமை நாளில் ஆசிரியரைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி.
கிருஷ்ண / பாரதக் கதைகளை மகள்களுக்குக் கூறும் போது, வெண்முரசின் கூறுமுறை அவர்களுக்கு மேலும் உவப்பாயிருப்பதைக் கவனிக்கிறேன். பாட்டி சொன்ன ஒரு அரக்கி என்பதைவிட குழந்தையை இழந்த பிச்சியாகவே பூதகி அவர்கள் நினைவில் வாழ்கிறாள்.
யுவால் நோவா ஹராரியின் "சேப்பியன்ஸ்" புத்தகத்தை குழந்தைகளுக்கான ஒரு கிராபிக் நாவலாக அவரும் சிலரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். வாசிப்பு சுவாரசியமும் தகவல்களும் எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது. இதைப்போல் வெண்முரசையும் கொண்டுவரும் எண்ணம் உண்டா என்ற கேள்வியோடு காத்திருந்தேன். வரிசையில் இரண்டாவதாக இருந்தபோது யூடியூபில் மற்றொரு நண்பர் கிட்டத்தட்ட இதே கேள்வியை இன்னும் சிறப்பாகக் கேட்டிருந்தார். அதற்கு ஜெயமோகனின் விரிவான பதிலையே எனக்குமாக விளங்கிகொள்கிறேன்.
இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நீண்ட உரையாடலில் மேலும் சிலர் வினாக்களோடு இருந்தமையால் உயர்த்திய கையை இறக்கிக்கொண்டேன். இந்நன்னாளில் ஆசிரியரைக் கண்டதும் அவர் உரையை கேட்டதும் தரும் மகிழ்ச்சியையும் எனது வணக்கங்களையும் தெரிவிக்க ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். நற்சொல் கூறி பதிலளித்து என் கடிதத்தை தன் தளத்திலும் வெளியிட்டிருந்தார்.
ஜெயமோகன் தளத்தில் :
Comments
Post a Comment