வெண்முரசு நாள் – குருபூர்ணிமா
மரபாக குருபூர்ணிமா என்று கொண்டாடப்படும் ஆனி மாத முழுநிலவு நாள் இன்று முதல் இன்னொரு சிறப்பாக "வெண்முரசு நாள்". ஏன்?
ஜெயமோகன் வாசகர் வட்ட நண்பர்கள் வரிகளில் :
தொன்று தொட்டு, இந்த நாளில் நமது வாழ்வில் ஞான ஒளி ஏற்றிய ஆசிரியர்களை வழிப்பட்டு வருகிறோம். பாரதம் இயற்றிய வியாசரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இவ்வருடம், மகாபாரதம், தமிழில், நாவல் வடிவில், ‘வெண்முரசு’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்படுள்ளது. தமிழ் மொழியில் நிகழ்ந்த மகத்தான சாதனைகளில் ஒன்று இந்த நாவல்வரிசை.
ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும்.
இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.
இந்த பெரும் முயற்சி முழுமையடைந்து, இந்நாவல் எழுதி நிறைவு செய்யப்பட்டதை, இவ்வருடம் தொடங்கி, ஆண்டு தோறும் குருபூர்ணிமா முழுநிலவு நாளில் வெண்முரசு வாசிப்பு, ஆசிரியருடனான உரையாடல் என கொண்டாடுவோம்.
நோயச்ச காலத்தின் தனிமை, நம்மைப் பற்றிய கவலை இருந்தாலும் கடிவாளம் நம் கையில் இருந்ததால் சற்று பரவாயில்லை ஆனால், ஊரில் இருக்கும் வயதில் முதிர்ந்த பெற்றோர், உடன் பிறந்தோர் குறித்த பதட்டமும், கேள்விப்படும் எல்லா தகவல்கள் மூலம் உண்டாகும் பேரச்சமும் என்றுமே ஒரு வித நிலை கொள்ளாமையையே அளிக்கின்றன. இதிலிருந்து சற்றேனும் மீட்பு என்பது இலக்கியமும் கலைகளும் தான். எனவே, தொடர்ச்சியான வாசிப்பு அளித்த மீட்பும் இன்பமும், அதுகுறித்த போதத்தை அளித்த ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கப்போகும் இந்த நிகழ்வுக்கு ஆவலாக காத்திருந்தேன்.
பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் ஆண்டுதோறும் சென்னை, ஓசூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு தவறாமல் செல்வதன் முதன்மை நோக்கம் எழுத்தாளர்களை சந்திக்க என்பது தான். பலமுறை முயன்றும் முடியாமல் போனது ஜெயமோகனை சந்தித்தல். அவருடன், கடிதம் மூலமாக தொடர்பில் இருந்தாலும் அவருடன் நேரடியாக ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. அதனாலும், இந்த சந்திப்பை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தேன்.
வெண்முரசின் மொழிக்கு நான் முழுவதும் ஆட்பட்டிருந்தேன். தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளாக அதை மட்டுமே படித்து வந்தது கூட ஒரு காரணம். இந்த வருடம், வெண்முரசு நிறைவுற்ற பின், சேர்ந்து போயிருந்த வாசிக்கவேண்டிய பல புத்தகங்களை ஒவ்வொன்றாகத் தொடங்கினேன். ஒரு சில புத்தகங்களை 20 பக்கம் கூட தாண்ட முடியவில்லை. முதன்மைக் காரணம், மொழி. ஒரு வாசகனாக என்னால், இந்த தடையை எப்படி கடப்பது என்றே தெரியவில்லை. ஆனால், அதை எழுதிய ஆசிரியரோ, அதன் சுவடு ஒன்று கூட தெரியாமல், புனைவுக்களியாட்டு சிறுகதைகள் என்று நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்துக்கொண்டிருந்தார். சரி, அவரிடமே கேட்போம் என்று என் கேள்வியை பலவிதமாக எழுதி, திருத்தி ஒரு விதமாக தயாரித்து வைத்திருந்தேன்.
பல நண்பர்களும் நல்ல ஆழமான பல கேள்விகளை கேட்டார்கள். என் பெயர் அழைக்கப்பட்டது - "ஆங் , சொல்லுங்க" என்றார் ஜெ. எல்லாம் ஒரு கணம் அணைந்து ஒளிர்ந்தது. என் நாயகன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் . நான் சொல்வதைக் கேட்கிறார், நான் அவரிடம் பேசுகிறேன் என்ற எண்ணங்கள் தனியாக நின்று பேசும் என்னை பார்த்துக்கொண்டிருக்கின்றன. இன்னொரு நான் வாயெல்லாம் பல்லாக உடலெல்லாம் சிலிர்ப்பாக அவரிடம் என் கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆம், உபநிஷத்து வரிகள் மெல்ல புரிந்தது.
ஒரு மரத்தில் இரு பறவைகள் அமர்ந்திருக்கின்றன
ஒன்று பழம் தின்கிறது,
இன்னொன்று பார்த்திருக்கிறது.
மனமெல்லாம் இனிப்பாய் இனித்து வழிந்த நாள்.
நான் அசடு வழிந்ததை மேலே பார்க்கலாம், கீழே கேட்கலாம் (1:36:18).

Comments
Post a Comment