அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் - ஒரு விவாதம்

 ஜெயமோகன் அவருடைய ஒரு பேட்டியில் "தமிழகத்தில் பொது வெளியில் ஒரு புத்தக வாசகனுக்கு மதிப்பில்லை, வாசிக்கும் ஒருவனிடம் அவன் குடும்பமும் சரி சுற்று வட்டமும் சரி அதை கைவிட அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள், நாம் ரகசியமாக தான் வாசிக்க வேண்டும்" என்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதை மறுத்து  ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் ஜெயமோகனின் தளத்தில் அவருடைய பதிலோடு வெளியாகியிருந்தது.  

வாசிக்க : 

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்


இதற்கான பதிலில், ஜெயமோகன் கூறியிருந்த  "இதற்கெல்லாம் அகவயமான மதிப்பீடு மட்டுமே உள்ளது, கணக்கெடுப்பு நடத்த முடியாது. அம்மதிப்பீட்டைச் சொல்பவன் மேல் உங்களுக்கு மதிப்பு உள்ளதா, அவருடைய கணிப்பை ஏற்குமளவுக்கு உங்கள் சொந்த அனுபவம் ஒத்துப்போகிறதா என்பது மட்டுமே கேள்வி." எனும் கருத்து எனக்கு ஒருவிதத்தில் என்னைக்குறித்து ஒரு நிறைவை அளித்தது. ஏனென்றால், இதுநாள்வரை நான் அவ்வாறு தான் செய்து கொண்டிருந்தேன்.  இந்த விஷயத்தில் என் எண்ணங்களை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.


தமிழகத்தில் வாசிக்கும் ஒருவருக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா? என் தரப்பாக நான் கூற விரும்புவது “இரண்டும் தான்”. ஆனால் பெருமளவில் எதிர்ப்பே.

ஏற்பு:

 

உலகியலுக்கான நமது கடமைகளை சரியாக செய்வதுவரை நம் வாசிப்பு ஏற்கப்படுகிறது  என்றே எண்ணுகிறேன்.

 

ஒரு மாணவனாக தேவையான நல்ல மதிப்பெண் - கல்லூரி முடித்ததும்  ஒரு நல்ல வேலை  - திருமணம் - குழந்தைகள் என சராசரி பெற்றோர்  அந்தந்த பருவத்தில் எதிர்பார்ப்பவற்றை நிறைவேற்றிவிட்டு படித்தும் வந்தவன் என்ற என் சொந்த அனுபவத்திலும் இவைகளை சரியாக செய்யாமல் படித்துக்கொண்டு மட்டுமிருந்த நண்பனது வாழ்வை அருகிருந்து கண்ட அனுபவத்திலும் இதைச் சொல்கிறேன். இதில் எது சரி எது தவறு என்று கூற இயலவில்லை. ஒத்துநோக்கினால் நாங்கள் இருவருமே ஒரே தீவிரத்தோடு தான் படித்தோம். ஆனால், நான் இன்றும் படித்துக்கொண்டிருக்கிறேன். அவனோ குடும்பம் கோரும் பொருளாதாரச் சுமையால் வேறுதிசையில் சுழல்கிறான்.

 

நல்ல அலுவல் காரணமாக வெளிநாட்டிற்கு  நான் வந்தபின், "ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் எல்லாத்தையும் தூக்கிப்போட்டு கொளுத்தப்போறேன் பாரு " என்று வஞ்சினம் உரைத்த என் அப்பாதான் இப்போது பணம்போட்டு ஒரு பீரோ வாங்கி என் புத்தகங்களைப் பராமரிக்கிறார்.


எதிர்ப்பு :

 

ஆனால், ஜெயமோகன் கூறுவது போல படிப்பது குறித்து பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களே எனக்கு கிடைத்தது & கிடைத்துக்கொண்டிருக்கிறது. இதை படிக்கும் நேரத்தில் பாடத்தை படிக்கலாம் - ஓடி விளையாடலாம் - ஆம்பிளைப்பிள்ளை  வெளிய நாலு இடத்துக்கு போய் நாலு பேரோட பழகுனாத்தான் பொழைக்க முடியும் -  மலைமேல உக்காந்துகிட்டு தனியா சிரிச்சுக்கிட்டு இருந்தா பைத்தியம்னு சொல்வாங்க - இன்னும் பல. காரணமெல்லாம் தெரியாது - கதை படிப்பது வீண் வேலை, அவ்வளவுதான். பாட புத்தகத்தைத்தவிர எல்லாமே கதை தான்.

 

இருபது ஆண்டுகளுக்குப்பின் இன்றும், "வீட்டில் டிவி இல்லேன்னா குழந்தைங்க என்ன செய்வாங்க" என்று பதட்டமாகும் நண்பர்கள் - "புத்தகம் படிப்பாங்க" என்ற பதிலுக்கு மேலும் பதட்டமாகவே  செய்கிறார்கள்.

 

இவ்வாறு அறிவுரைப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு நெருங்கியவர்களே. நம்மீதான அக்கறை என்றேதான் காரணமும் கூறுவார்கள். அதுவும் ஒருவிதத்தில் உண்மைதான். அன்பாலும் - சில வேளைகளில் - அகங்காரத்தாலுமே இவர்களை கடந்துவந்திருக்கிறேன்.

 

இதில் சுவாரசியமான முரண் - நாம் படிப்பது பிடிக்காவிட்டாலும் அதன் பயன்பாடு அவர்களுக்குத்  தேவையாக இருக்கிறது. நீ படி - எனக்கு வேண்டியதை மட்டும் நான் உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்.  இதில் "வேண்டியது" என்பது மீண்டும் உலகியல் குறித்து மட்டுமே - எந்த பொறியியல் பிரிவில் பிள்ளையை சேர்க்கலாம், எந்த நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என்பது போன்றவையே.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை கலை இலக்கியம் என்பதெல்லாம் பெருமளவில் சினிமாவில் தொடங்கி அங்கேயே முடிந்தும் விடுகிறது. சினிமாவில் சிறந்த கலைஞர்களின்  பலவீனங்களே அவர்தம் கலையை மீறி கவனிக்கப்படுகிறது. விதிவிலக்காக வெளியே தெரியவரும் எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள்  அவர்களின் பொருளாதாரத்  தோல்வியாலும் ஒழுக்க அளவுகோல்களாலும்  ஒரு விலக்கத்தோடே பார்க்கப்படுகிறார்கள். எங்கே நம் மகனோ மகளோ இப்படி ஆகிவிடுவார்களோ என்றே வாசிப்பு  ஒரு விலக்கப்பட்ட கனியாகவே ஒரு அச்சத்தோடு அணுகப்படுகிறது. இது கனி என்பது தெரிந்தே விலக்கி வந்த நாம் காலப்போக்கில் அதன் பயன்பாடே மறந்து ஒரு பழக்கமாகவே விலக்கத்தொடங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன்.

 

 

ஒப்பீட்டளவில், இன்றும் கூட,  முன்னறிமுகம் இல்லாத ஒருவர் படிப்பதைப் பார்க்கும் நம்மவர்கள் பெரும்பாலும் அதுகுறித்து எதிர்மறை எண்ணமே கொண்டிருப்பதாகவே எண்ணுகிறேன்.


ஜெயமோகன் தளத்தில் இந்தக்குறிப்பு  வெளிவந்துள்ளது. வாசிக்க :

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

Comments

Popular posts from this blog

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வெண்முரசு ஆவணப்படம் - ஆஸ்டின் திரையிடல்

சஞ்சய் என்னும் பெருஞ்சூதன்