கேள்விகளால் ஆன இரவு - என் கவிதை ஆனந்த விகடனில்
பெங்களூருவில் வழக்கமாக வெள்ளிக்கிழமை காலையிலும், சில நாட்கள் வியாழன் மாலையிலுமே கூட கிடைக்கும் ஆனந்த விகடன் இந்த வாரம் இன்னும் வந்து சேரவில்லை.
இதற்கு காரணம் இந்த வாரம் வெளியாகியுள்ள "கேள்விகளால் ஆன இரவு" என்னும் கவிதை தான் என்றும் அதனால் தமிழ்நாட்டிலேயே பிரதி பஞ்சம் என்றும் அதை எழுதிய கவிஞர் ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும் நம்புகிறார்.
"உன் கவிதையா? விகடன்லையா?" என்று பார்வையாலேயே கேட்கும் அவரது தீவிர விசுவாசியும் மற்றும் ஒரே வாசகியுமான அவரது மனைவியிடம் நிரூபிக்கவேனும் ஒரு பிரதி கிடைக்காதா என்று கவிஞர் பெங்களூரு தெருக்களில் பிரதி தேடி திரிவதாக தகவல்.
அவருக்கு அந்தக் கவிதையை பிச்சையிட்ட அவர் மகளோ சமநிலை குலையாமல் வழக்கம் போல் அவர் கேட்கும் கேள்வியான "இன்னிக்கு சீக்கிரம் சாப்டு தூங்கி மத்தியானத்த சாயங்காலம் ஆக்கிறேன், சீக்கிரம் வந்துருவியாப்பா?" என்று கேட்டுவிட்டு விளையாடப் போய்விட்டார்.
எனது கவிதை ஆனந்த விகடன் இதழின் "சொல்வனம்" பகுதியில் வெளிவந்துள்ளது.

Comments
Post a Comment