இந்தியின் தேவை - விவாதம்.
இந்தியின் தேவை என்னும் தலைப்பில் ஜெயமோகனின் தளத்தில் நடந்த சிறு விவாதத்தில் என் தரப்பாக எழுதிய கடிதம். அவர் தளத்தில் வெளியிட்டு தர்க்கபூர்வமான விளக்கத்தையும் அவர் அளித்திருந்தார். உணர்வுபூர்வமாக யோசிக்க வேண்டியதையும் தர்க்கபூர்வமாக யோசிக்க வேண்டியதையும் குழப்பிக் கொள்ளும் பழக்கம் குறித்து யோசிக்க வைத்த சம்பவம்.
அன்புள்ள ஜெயமோகன்,
நலம் விழைகிறேன்.
“இந்தியின் தேவை” மற்றும் “இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்” வாசித்தேன்.
இராஜீவ் கூறுவது சரிதான். அவரது வட மாநிலங்கள் அளவுக்குத் தேவை இல்லையெனினும் பெங்களூருவில் வசிக்கும் எனக்கும் கூட இதே எண்ணம் இருக்கிறது.
அறிவார்ந்த விவாதத்துக்காக இல்லையெனினும் தொடர்பு கொள்ளவேனும் இந்தி தேவையாகிறது. அந்தத் தொடர்பு கொள்ளும் தேவை இப்போது பெருகியிருக்கிறது என்று எண்ணுகிறேன்.
பல மாநிலத்தவர் உடன் பணிபுரியும் சூழல் இப்போது கட்டயாமாகப் போய்விட்ட நிலையில், வடக்கு – தெற்கு என்றெல்லாம் பேதமில்லாமல் போகச் செய்யும் விஷயமாக இந்தி இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறேன். அதை மாற்றும் திராணி இங்கு இந்தியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் விலகிக் கொள்வதே நல்லது.
ஏழு பேர் கொண்ட எங்கள் அணியில் இந்தி தெரியாத ஒரே ஆள் நான் மட்டுமே. ஏழில் நான்கு பேர் தென் மாநிலத்தவரே.(கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடகம்). என் ஒருவனுக்காக எந்த ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கையும் கூட ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது.
எல்லோருக்கும் தெரிந்த மொழியான ஆங்கிலத்தில் பேச நிர்பந்திக்கும் சிறு கூட்டத்தவராக நாம் மாறிப் போகிறோம். அதனால் இயல்பாகவே, ஒரு நட்பு மறுக்கப்படுகிறது. மூன்று வருடம் கல்லூரியில் உடன் படித்தவன் நண்பனாக, நெருக்கமாக இருக்கிறான், பத்து வருடங்களுக்குப் பின்னும். ஏழு வருடம் உடன் பணியாற்றுபவர்கள் நண்பர்களாக இல்லையே.
பெரும்பாலும், (எப்போதுமல்ல) நம் மாற்று ஒரு “தமிழ்ச்சங்கம்” ஆரம்பிப்பதாகவே இருக்கிறது. அதற்குத் தேவை இரண்டாவது தமிழன். அவ்வளவே. ஒரு நல்ல அறிவார்ந்த தோழமையை (Intellectual company) விடுத்து அஞ்சலி காணாமல் போனதைப் பற்றி பேசி மகிழலாம். (பெரும்பாலும்)
தமிழகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாலேயே இந்த நிலைமை என்றே கருதுகிறேன். ஆங்கிலத்தைப் போலவே ஒரு மொழிப் பாடமாக இந்தி இருக்கும் சூழலில் இந்த நிலைமை இருக்காது என்றே எண்ணுகிறேன். வாய்ப்பு என்று நான் கூறுவது கிராமப்புற, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களையே.
இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் இருந்தபோதான அரசியல் மற்றும் வாழ்வியல் முறைகள் இன்று காலவதியாகிவிட்டது. அன்று “தனித் தமிழ்நாடு” கொள்கையை முன்னிறுத்தியவர்கள் இன்று அதை மறந்து போன அல்லது மாற்றிக் கொண்ட நிலையில், இந்தி குறித்தான நம் கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்தாக வேண்டும். குறைந்தபட்சம் நம் அடுத்த தலைமுறைக்காகவேனும்.
உங்கள் கருத்தை அறிய ஆவல்.
=====================
இதற்கான ஜெயமோகனின் நல்ல பதிலை வாசிக்க :
Comments
Post a Comment